×

சென்னை புறவழிச்சாலையில் உள்ள வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடி கட்டணம் திடீர் உயர்வு

* 10 முதல் 40 வரை அதிகரிப்பு˜* இன்று நள்ளிரவு முதல் அமலாகிறதுசென்னை: சென்னை புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சவாடிகளை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்து வரும்நிலையில், மாநிலத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரூ.10 முதல் ரூ.40 வரை உயர்த்தி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டணம் இன்று நள்ளிரவு 12 மணிக்கு நடைமுறைக்கு வரவுள்ளது.  தமிழகத்தில் 6,606 கி.மீ.க்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 5,134 கி.மீ., சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரித்து வருகிறது. மீதமுள்ள 1,472 கி.மீ., சாலைகள் ஒன்றிய அரசின் நிதியில், மாநில நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக, தமிழகம் முழுவதும் தற்போது 48 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.  சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் அல்லது சாலை அமைத்த முதலீடு திரும்பப் பெறும் வரை கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். அதற்கு பின்னர் 40 சதவீத சாலை பராமரிப்புக்கான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 8 முதல் 10 சதவீத அளவிற்கு சுங்க கட்டணங்கள் உயர்த்தப்படுகிறது. இந்நிலையில், சென்னை புறவழிச்சாலையில் அமைந்துள்ள வானகரம், சூரப்பட்டு மற்றும் பட்டறைபெரும்புதூர் ஆகிய மூன்று சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம்  ரூ.10 முதல் ரூ.40 வரை உயர்த்தி அதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது. அதேபோல, காரைக்குடி-ராமநாதபுரம் இடையே உள்ள கோடிக்கோட்டையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சுங்கச்சாவடி, வென்த்தூர் சுங்கச்சாடி, திருச்சி, காரைக்குடி இடையே உள்ள லட்சுமணப்பட்டி, லெம்பலக்குடி சுங்கச்சாவடி, தஞ்சை-புதுக்கோட்டை இடையே உள்ள பழைய கந்தர்வக்கோட்டை, திருமயம்-மானாமதுரை இடையே உள்ள செண்பகம்பேட்டை, மதுரை-பரமக்குடி இடையே உள்ள ராமநாதபுரம் பிரிவு, திருப்பாச்சேத்து வடக்கு, போகலூர் உட்பட தமிழகம் முழுவதும் 21 சுங்கச்சாவடிகளில் இந்த புதிய கட்டணம் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் தற்போது வாகனங்களின் வகைகளின்படி 6 வகையான கட்டணங்கள் நிர்ணயித்து வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னை அருகே உள்ள 6 சுங்கச்  சாவடிகள் உள்பட தமிழகத்தில் 60 கி.மீ. தூரத்துக்குள் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்  என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரியிடம் நேரடியாக  கோரிக்கை விடுத்திருந்தார். ஒன்றிய அமைச்சர் நிதின்கட்ரியும்,  நாடாளுமன்றத்தில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, சுங்கச்சாவடிகள்  அகற்றப்படும் என உறுதியளத்தார். ஆனால்,  தற்போது சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை ₹10 இருந்து ₹40 வரை உயர்த்தியது அதிர்ச்சியளித்துள்ளது. தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், வாகன ஓட்டிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சுங்க கட்டணத்தையும் உயர்த்தி இருப்பது அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும் என்று பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் ஒன்றிய அரசு சுங்க கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது, சங்ககட்டணமும் உயர்ந்துள்ளதால், வாகன கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.* தமிழகம் முழுவதும் தற்போது 48 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. * சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள்  அல்லது சாலை அமைத்த முதலீடு திரும்பப் பெறும் வரை கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். * இதற்கு பின்னர் 40 சதவீத சாலை பராமரிப்புக்கான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். * ஒவ்வொரு ஆண்டும் 8 முதல் 10 சதவீத அளவிற்கு சுங்க கட்டணங்கள் உயர்த்தப்படுகிறது….

The post சென்னை புறவழிச்சாலையில் உள்ள வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடி கட்டணம் திடீர் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Charge of ,Chennai subway ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...